நமது இதிகாசங்கள் சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை.... ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு பாடங்களின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது.
நேற்றிரவிலிருந்து பீஷ்மரை நினைப்பதை என்னால் நிறுத்தவே முடியவில்லை... அம்புப் படுக்கை என்றால் என்ன, பீஷ்மரைப் போன்ற மாவீரன், புலன்களை வென்ற பெருவீரன், தன் வயதொத்த பெண்ணை தந்தை மணப்பதற்காகத் தன் இளமையின் தேவைகளைத் துறந்த அன்பாளன் (அவர் அந்தப் பெண்ணை முதலில் பார்த்திருந்தால் கதையே வேறு என்பது வேறு கதை ), தன் தேசத்திற்கு ஆற்றவேண்டிய பணிகளுக்காக அவமானங்களைச் சகித்துக் கொண்ட தலைவன், குழந்தை பெற்றுக் கொள்ளாவிடிலும் தனது தம்பிகள், அவர் மகன்கள், பேரன்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்குத் தந்தையாக இருந்தவன் எப்படி அம்புப் படுக்கையில் விழ முடியும்? அப்படியானால் அம்புப் படுக்கை எதன் உருவகம்? என்ன சொல்ல நினைக்கிறார் வியாசர் என்ற கேள்விகள் அலைபோல எழுவதும் விழுவதுமாக இருந்தன ஓயத்தான் இல்லை, பதிலும் இந்தக் கட்டுரையும் மனதில் வரும் வரை!!
அறம் அறிந்தவன் அறம் பிழைக்கும் போது அவனது மனமே அவனைச் சுட்டெரிக்கும் அல்லது அம்பாய்க் குத்தும். அப்படி வாழ்நாள் முழுவதும் ஒருவர் இழைத்த தவறுகள், பிழைத்த அறங்கள் அனைத்தும் வரிசை கட்டி நிற்குமானால் அது அம்புகளின் அணிவகுப்புப் போலத்தான் இருக்குமாயிருக்கும். தன் குல ஆண்களுக்காக அவர் செய்த அறமீறல்கள் அனைத்தும் கண்முன்னே நின்றிருக்கும். நினைத்த நேரத்தில் உடலை விட்டு நீங்கும் வல்லமை பெற்றிருந்தும், நீட்டித்த நினைவுகள் அவரைத் தின்றிருக்கும்.... அம்பாய் நின்றிருக்கும்... தன் தேசத்தின் வலிமையை, தன் உடல் வலிமையை, புத்தி கூர்மையை பயன்படுத்தி எத்தனை பேரை அவமதித்தார், வேதனைப்படுத்தினார் என்று ஒரு பெரிய வரிசை நின்றிருக்கும்!!
- தவறென்று தெரிந்தும், முட்டாள்தனம் என்று தெரிந்தும், தம்பிகளுக்காக, அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற பெண்களின் விருப்பத்திற்குப் புறம்பாக, தம்பிகளுடன் சேர்த்துவைக்க முயற்சித்தது, அவர்கள் கெஞ்சியும் கதறியும் மனம் இரங்காமல் நடந்து கொண்டது ஒரு அம்பு.
- கண் தெரியாத திருதிராஷ்டிரனுக்குப் பெண்ணெடுக்க காந்தாரம் சென்றது தவறில்லை ஆனால் பெண் கேட்கப்போனவர் சேனையோடு போனது, மிரட்டி பணியவைப்பதுதானே!! அது ஒரு அம்பு
- திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்க வாய்ப்புகள் இருந்தும், (அரசு பதவியின் வசதிகளை நினைத்து அல்லது பாசத்தின் காரணமாக) தட்டிக் கேட்காமல், வாளாவிருந்தது ஒரு அம்பு; தான் அறம் மீறுவது மட்டும் பிழையன்று, அறம் மீறப்படும்போது தட்டிக் கேட்காமல் இருப்பதும் பிழையே..அறம் மீறலே.. அம்புகளை உருவாக்கும் செயலே!!
- சகோதரர்களுக்குத் துரோகம் இழைத்த துரியோதனன் பக்கம் நின்ற பிழை ஒரு அம்பு; துரியோதனாதிகளும் பாண்டவர்களும் ஒரேவிதமான உறவென்றாலும், துரியோதனனுக்காக யுத்தம் புரிந்தது ஒரு புறம் என்றால், வில்லை வெட்டி எறிந்து விட்டு வெளியேறிய விதுரனைப் போல் அல்லாமல், அத்தனை அவமதிக்கப்பட்டும் அறமற்ற துரியோதனனுடன் நின்றது அடுத்த அம்பு...
- விரும்பிய நேரத்தில், உடலை துறக்கும் வலிமையும் வரமும் இருந்தும், பேரனுக்குப் பிள்ளைகள் வந்தபின்னும், சந்தனு வம்சத்தைக் காப்பதாக கொடுத்த வாக்கை காப்பதான கற்பனையில் சரியான முறையில் காக்கவும் இல்லாமல், வம்சத்தின் ஒருபகுதிக்கு துரோகம் இழைத்தும் வாழ்ந்தது அடுத்த அம்பு.
- தன்னைக் காப்பதும் அறம். வள்ளுவர் இல்லறத்தாருக்கு கூறிய பதினோரு வகை அறங்களிலும் பிழைப்பட்டார். துறவறத்தாருக்கான அருளுடைமை, வாய்மை இரண்டிலும் பிழைப்பட்டார். ஆனால் எல்லாவிதத்திலும் தம் பெருமை துறந்து வாழ்ந்ததும் அம்பாக நின்றிருக்கும்.
என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த அம்புகளின் வீரியம் அப்பேர்ப்பட்ட வீரனை வென்றது; மரணப்படுக்கையில் குத்திக் கிழித்தது.
அனைத்து செயல்களும், செயலின்மைகளும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப விளைவுகளைத் தருகின்றன. அவற்றை மாற்றும் சக்தி இயற்கைக்கும், இறைக்கும் கூட இல்லை. அதனால் அறியாமல் செய்த பிழை என்று தப்பித்து விட முடியாது. ஆனால் அறிந்தே செய்யும் பிழைகள், குற்றவுணர்வு என்னும் அம்புகளாக ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டிருக்கின்றன. உண்மையில் மரணம் வரை காத்திருப்பதில்லை அவை; அன்றாடம் நம்மைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அன்றாடம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது நமது அம்புகளை கவனித்து, உருவிப் போட வேண்டும் என்ற காரணத்திற்காக, ஒவ்வொரு வருடமும், பொங்கலுக்குப் பின்னால், சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பித்த பின் வரும் வளர்பிறை அஷ்டமியில் பீஷ்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்வோரும் உண்டு. நம்முள் இருக்கும் பீஷ்மரைச் சுத்தம் செய்தலே தர்ப்பணம் செய்தலை விட தலையாய கடன்...
எத்தனை விதமாக, அறம் பிழைத்தலின் விளைவுகளை சொல்லித் தருகிறது என் தேசம்!!! என்ன பேறு பெற்றேன் இத்தகைய தேசத்தில் பிறக்க.... இன்னொரு பிறப்பில்லாதிருக்க வேண்டும்!! அப்படியிருந்தால், இந்த தேசத்திலேயே, தமிழ் பேசும், தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் மனிதப் பிறப்பாகவே பிறக்க வேண்டும்!!!
எந்தப் பிறப்பிலும், இந்தப் பிறப்பின் எஞ்சிய நாளிலும், எந்த நிலையிலும் மனதால், சொல்லால், செயலால் அறம் பிழைக்காமல் வாழ வேண்டும்... இது ஒன்றே பிரார்த்தனை...
No comments:
Post a Comment