வாசனைகள் மூளையின் மேற்பரப்புகளை விட்டு, மூக்குக்கு மேலே, கண்களுக்குப்பின்னாலுள்ள ஆல்ஃபா
"இலக்கியம் அறிந்தவனின் வாழ்க்கை ஒரு கவிதைபோல. அது ரத்தினச்சுருக்கமாக இருக்கலாம். எளிமையானதாக இருக்கலாம். அவனுடைய அன்றாட நாட்கள் மிகச்சாதாரணமாகக் கடந்துசெல்லலாம். ஆனாலும் அவன் வாழ்க்கை எல்லையற்றது. அதன் ஒவ்வொரு சொல்லுக்கும் முடிவிலாத பொருள் உண்டு. அவன் வாழ்க்கை விதைகளின் குவியல். அது உறங்கும் பெருங்காடு. ஒரு பூவின் இதழிலிருந்து மானுடத்தின் அனைத்து வசந்தங்களையும் உணர்ந்துவிட முடியுமா? வசந்தங்களை உருவாக்கி உருவாக்கி விளையாடும் பிரபஞ்ச லீலை வரை சென்றுவிட முடியுமா? " என்ற கேள்விப் பெருங்கணைகளோடு இல்லை இல்லை பொங்கிப் பிரவாகிக்கும் கங்கையாக, தூங்கிக் கிடந்த என் விதைகளை உயிர்ப்பிக்க முயன்றார்
2016ல்"எழுதாமல் போவேனோ" என்ற கட்டுரையை எழுதும்போது நான் அறிந்திருக்கவில்லை எனது எழுத்துலக வனவாசம் எவ்வளவு வலுவானது என்று!! வனவாசம் வாழ்வின் தடத்தை மாற்றிபோடும்
கம்பனும், வள்ளுவனும், பாரதியும் இன்னபிற தேவதைகளும் (தேவதைகளுக்கு ஆண்பால் என்ன, இம்மூவரையும் இந்த சொல்லுக்குள் எப்படி அடைக்க, எப்படி ஒதுக்க?) என்னுள் தூவிச்சென்ற பல்லாயிரம் விதைக்குவியலோடு உறங்கியே தொலைந்த பெருங்காடுகளும், உறங்காமல் உறைந்த ரயில்களின் அட்டவணைகளுமாக நகர்கிறது வாழ்க்கை....
விதைத்தது இம்மூவர் மட்டும்தானா...என்னைக் கடக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதரும் விதைக்கவில்லையா... தொலைந்தது எது? தொலைத்தது யார்? இரண்டும் ஒன்றல்லவோ... காரணமும் கருப்பொருளும் நானல்லவோ...
எழுத்து என்னை வாழ்வித்தகாலம் போய், பிச்சியாய் எழுத்து என்னுள் தவித்தலைந்து, கர்ப்பகாலம் தாண்டிய சேய் போல வேறெதுவும் செய்யவொட்டாமல், வலியோடும் நிறைவோடும் பிறப்பெடுத்த காலமும் போய், பேசப்பிடிக்காமல், பேசத்தோன்றாமல், ஓர் ஆழ்ந்த கடலுக்குள் நீண்ட அடர் குகைக்குள் உட்கார்ந்துகொண்டு என் எழுத்து தவம்செய்கிறதோ... இல்லை மாய்ந்தேதான் போனதோ...
நான் மூச்சுத்திணறி நின்ற போதும் கூட என்னுடன் பயணித்த இலக்கிய நதி தேங்கிநிற்கிறது... என் பேனா பேச்சுத்திணறி ஐந்தரை ஆண்டுகளாகிறது. எப்படி மீட்டெடுப்பேன் என்னுள் தொலைந்த / என்னைத் தொலைத்த கம்பனை, வள்ளுவனை, பாரதியை...
பார்ப்போம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று... தேங்கி நிற்பது காடு வளர்க்கக் காத்திருக்கும் அணையா, காத்துக்கிடந்து காயவிருக்கும் துளியா என்று... விதைகள் தூங்கியோ எரிந்தோ தொலையுமா, ஜெயமோகன் ஜெயிக்கிறாரா என்று...
காடு வளர்ப்பதும் நதியைக் காப்பதும் யார்? காலம் எப்படி பொறுப்பாகும்!!
No comments:
Post a Comment