நேற்று பாரதியின் பிறந்த நாள்! இன்று புதிதாய்ப் பிறக்கச் சொன்னவரின் பிறந்த நாள்! என்றும் புதிதாய்ப் பிறந்ததாய் எண்ணி மகிழ்வுடனும் தன்முனைப்புடனும் பணி புரிவோருக்கான முன்னோடி பாரதி! உலகனைத்தையும் நேசித்து, உரிமை கொண்டாடி, அதே சமயம் உலகனைத்தையும் தள்ளி நிறுத்தி அதனால் முரணாய்த் தெரிவோர்க்கும் முன்னோடி பாரதி!
வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்
மண்ணிற் றிரியும் விலங்கெலாநான்
கானிழல் வளரு மரமெலாநான்
காற்றும் புனலுங் கடலுமேநான்.
விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான்
வெட்ட வெளியின் விரிவெலாநான்
மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான்
வாரியி லுள்ள வுயிரெலாநான்.
கம்ப னிசைத்த கவியெலாநான்
காருகர் தீட்டு முருவெலாநான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழினகர் கோபுரம் யாவுமேநான்.
அண்டங்கள் யாவையு மாக்கினோனான்
அவைபிழை யாமே சுழற்றுவோனான்
கண்டநற் சக்திக் கணமெலாநான்
காரண மாகிக் கதித்துளோனான்.
நானெனும் பொய்யை நடத்துவோனான்
- பாரதி
நேற்றிரவு அவர் கவிதைகளைப் புரட்டியபோது கண்ணில்பட்ட கவிதை இது. நேற்றுதான் முதல் முறையாக வாசித்தேன்; ஆனால் பலமுறை இந்தக்கருத்தை உணர்ந்திருக்கிறேன்! பாரதி இருந்த காலத்தில் பிறந்திருக்கலாம் என்று சிலசமயம் நினைத்துக் கொள்வதுண்டு! நேற்றும் நினைத்தேன்! கடையத்திலேயே வாழ்ந்திருந்தாலும் சந்தித்திருப்பேனா என்பது கேள்விக்குறியதுதான்! இத்தனை எளிதாய் அவர் கவிதைகளும் கிடைக்காமல் போயிருக்குமே! அதனால், காலத்தின் தூரமும் நல்லதுதான்!
No comments:
Post a Comment