நின்னைச் சரணடைந்தேன் எனத்தொடங்கும் பாரதி பாடலை வாசித்தாலும் கேட்டாலும் இந்த உணர்வு எழாமலிருப்பதில்லை! மயக்குவது யார்? தமிழோ? இசையோ? கவியோ? கடையத்தில் பிறந்து பாரதி பாடல்களுடன் வளர்ந்த எனக்கு, அவரது பாடல்கள் பிடிப்பதில் வியப்பொன்றுமில்லைதான்!! ஆனாலும் இந்தக் கவிதை கொஞ்சம் அதீதமானது! இந்த பாடல் என்னை அவ்வளவு தூரம் அசைத்துப் பார்ப்பதன் காரணம் பாரதியா,இசையா, இனிய தமிழா?
இந்தப்பாடலை யார் பாடினாலும் கேட்பது சுகம்! இளையராஜா, பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உன்னி கிருஷ்ணன் என்று யார் பாடினாலும் சுகம்!! வலியோடுகூடிய சுகம்! பாடும் விதம் சற்று மாறினாலும்கூட, பாடலைக்கேட்கும்போது எழும் உணர்வுகளில் வேறுபாடோன்றும் இருப்பதாய்த் தெரியவில்லை! பந்துவராளியில்/புன்னாகவராளியில் யார் என்ன பாடினாலும் எனக்குப் பிடித்துவிடுமோ? அப்படியும் சொல்வதற்கில்லை!
பாரதி என் மானசீக வழிகாட்டிகளில் ஒருவர். 32 வயதுக்குள் ஞானத்தெளிவுடன், மாமனிதானாய் வாழ்ந்து முடிந்த பாரதி தனது குழப்பங்களை, வலிகளைச் சொன்ன பாடல்களில் இதுவும் ஒன்று!! "தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவுபெறும் வண்ணம்" செய்ய கண்ணம்மாவைக் கேட்கும்போது பாரதியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? காலனைக் காலால் உதைக்கும் துணிவு கொண்ட அவருக்கு, வீரம் சொட்டும் புதிய ஆத்திசூடி எழுதிய அவருக்கு, எத்தகைய குழப்பம் இருந்திருக்கக்கூடும் இப்படி ஒரு வலிமிகுந்த கவியெழுத? தன் வாழ்வின் தளம் கடந்து வாழ்தல் எல்லோர்க்கும் எளிதாகுமோ? பாரதி போல வையம் பயனுற வாழவேண்டுமென்றால், என்ன செய்யவேண்டும்?
மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சத்துடன் புகழையும் உயர்வையும் கேட்கும் தமிழா? நல்லது தீயது பிரித்து அறியாவிடிலும் சோர்வில்லை தோற்பில்லை என்று நம்பிய திடமா? 12 வரிகளிக்குள் வேதனை, பயம், வலி, குழப்பங்களைச் சொல்லி, இவையாவும் நீங்கும் என்ற நம்பிக்கையும் தருவது தமிழின் வலிமையா அன்றி கவியின் வலிமையா அறிகிலேன்!
No comments:
Post a Comment