ஆசி வாங்குவதற்கல்லாமல்,
யார் காலிலாவது விழுந்திருக்கிறீர்களா? மன்னிப்பு கேட்டோ, உதவி கேட்டோ காலில் விழுந்திருக்கிறீர்களா? நிஜத்தில் அல்லாமல் மானசீகமாகவாவது விழுந்திருக்கிறீர்களா? எத்தனை பெரிய உதவிக்காக? அப்போது உங்கள் மனநிலை என்ன? உங்களைவிட வயதில் குறைந்தவர் காலில் விழமுடியுமா?
சிறுஉதவிக்காக பிறர் பாதம் பணியத்துணிவீர்களா? ஒருவாய்ச்சோற்றுக்கும் ஒரு குவளை நீருக்கும், உங்களைவிட ஏறத்தாழ 40 வயது குறைந்த, முன்பின் தெரியாத பெண்ணின் பாதம் தொடுவீர்களா? உள்ளிருக்கும் கௌரவம் இடம் கொடுக்குமா? அப்படிக் கேட்கவேண்டுமென்றால், அந்த கர்வமழிக்க எத்தனை நாளைய பட்டினி வேண்டும்?
எண்பது வயது மூதாட்டி பாதம் தொடமுயல பதறிவிலகியது வலி என்றால், அதன்பின் அந்தப்பெண்மணி என் தலையில் கைவைத்து "மகராசியாய் இரு மகளே" என்று வாழ்த்தியது இன்னும் அதிக வலி! என் கைகளைத்தொட்ட அந்தக்கரடுமுரடான கரங்கள் அந்தப் பெண் கடுமையாய் உழைப்பவராயிருந்திருக்கவேண்டும் என்று உணர்த்தின! உழைத்ததைச் சேர்த்துவைக்க இயலாத நிலையா? அல்லது சேர்க்க நினைக்காத நிலையா? பிறர்க்கு வாரி வழங்கியாதால் சேர்க்கவில்லையா? சகமனிதர்கள் கைவிட்டனரா? காலம் கைவிட்டதா? உள்ளுக்குள் ஆடிப்போய்விட்டது!
ஒருவேளை உணவும், கொஞ்சம் பணமும் தவிர கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. காலப்போக்கில் உடைகள் மாறியதால், பயணத்தின்போது
கையில் புடவைகளில்லை. வெய்யில் காலம் எனவே, சால்வைகளில்லை. பல்லில்லாத பாட்டிக்குக் கொடுக்க வாழைப்பழமில்லை; ஆப்பிள் மட்டுமிருந்தது! நெடுந்தூரக்கார்ப்பயணத்துக்காக, கையோடு எடுத்து வந்த மதிய உணவு உள்ளே இறங்க மறுத்தது! ஒருவாய்ச்சோறு!
இதைத்தாண்டி இன்னொருகேலி உள்ளோடுகிறது! என்னோடு வாருங்கள் என்று சொல்ல மனமில்லாமல், கொடுக்க ஒன்றுமில்லாதற்காக வருந்தி நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாக!!
No comments:
Post a Comment