அறத்துப்பாலில் இல்லறவியலில் ஈகையை வைத்து, பொருட்பாலில் குடியியலில் இரவாமையை (அல்லது இரவச்சம்) வைத்த வள்ளுவரின் அறிவாற்றலை எவ்விதம் போற்றுவது!! வள்ளுவரிடம் மட்டுமல்ல, ஒளவையிடமும் இதே மனப்போக்கைக் காணலாம். ஏற்பது இகழ்ச்சி என்ற அடிக்கு அடுத்தது ஐயம் இட்டு உண்! இரத்தலும் ஈயாமல் இருத்தலும் இழிவு என்ற தெளிவு தமிழின் ஞானத்திற்கு ஒரு நல்ல உதாரணம்.
ஆனால், தெருமுனைகளில், கோவில் வாயில்களில் சின்னஞ்சிறு குழந்தைகளைக்காட்டி இரக்கும் பெண்களைப் பார்க்கும்போது இந்த ஞானம் பறந்துவிடுகிறது! குரங்காட்டிகளைப் போல, பாம்பாட்டிகளைப் போல, குழந்தையாட்டிப் பிழைப்பதா என்ற ஆதங்கமோ, இப்படிப் பிழைப்பதை விட குழந்தையைக் கொடுத்துவிட்டு ஒழிந்து போ என்ற கோபமோ அன்றன்றைய மனநிலைக்கேற்ப ஏற்படுகிறது.
கடந்த வாரத்தில், ஒரு தெருமுனை பிச்சைக்காரியிடம் காட்டிய கோபம் இன்னும் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டிருக்கிறது! இன்னும் சற்று அதிக நேரம் என் வாகனம் அந்த இடத்தில் நிற்கவேண்டியிருந்தால் அப்பெண்ணின் நிலை என்னவாயிருக்கும் என என்னால் அறுதியிட்டுச்சொல்ல இயலவில்லை. வள்ளுவரையும் ஔவையையும் நினைத்தவண்ணமாக நாட்கள் நகர்ந்தாலும், பல்சக்கரங்களில் சிக்கிய குப்பை தானும் அடிபடுவதுடன் சக்கரத்தின் இயக்கத்தையும் நிறுத்துவது போல, அந்நிகழ்ச்சி வாழ்வின் இயல்புநிலை குலைத்ததாகவே உணர்கிறேன்!! அறம் பிழைத்தேனோ!
Nice
ReplyDelete