ஏன் யாரோ செய்த தவற்றிற்காக கல்லாக மாற சபிக்கப்பட்டாள் என்ற
கேள்வியும் இந்தக்கதை என்ன சொல்ல விழைகிறது என்ற தேடலும் ராமாயணத்தை
நினைக்கும்போதெல்லாம் எழாமலிருப்பதில்லை!
பெண்கள் மீதான அடக்குமுறைக்கான ஏற்பாடு மட்டும்தானா இந்தக்கதை? ராமாயணம்
மனைவியரின்மேல் ஆணுக்குள்ள உரிமையை,
ஆளுமையை வெவ்வேறு வடிவங்களில்
வெளிப்படுத்தியிருந்தாலும் இந்தக்கதை அதையும் மீறிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.
மிகவும் நம்பப்பட்ட ஒருவரால்,
அல்லது ஒரு விஷயத்தில்
ஏமாற்றப்படும்போது மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஒன்று முறிந்துபோகிறது; வாழ்வின்
இனியவிஷயங்களை ரசிப்பது - ரசிப்பது என்ன - உணர்வது கூட
இயலாமல் போகிறது. வழக்கமாக பாடலொன்றை முணுமுணுத்துக்கொண்டு
ரசனையுடன் செய்யப்படும் வேலைகள் கூட,
செய்யவேண்டிய கடமைகளில்
ஒன்றாகிப்போகிறது! கைகளும் கால்களும் இயந்திரம் போல வேலை பார்க்க
மனமோ வேறெங்கோ சஞ்சரிக்கும் நிலை ஏற்படுகிறது. எனக்கென்னவோ
கல்லாதல் என்பது இதுதான் என்றே தோன்றுகிறது.
அகலிகை இந்திரனால் கல்லானாளா
அல்லது தன்னை நம்பமுடியாத கௌதமரைத் தான் நம்பிய வேதனையால் கல்லானாளா என்பது அவள் மட்டுமே அறிந்திருப்பாள்!
வாழ்வின் அனைத்து தளங்களிலும்
கல்லாயிருந்தாளா அல்லது கௌதமருக்கு மட்டும் கல்லாயிருந்தாளா என்பதும் அவள் மட்டுமே
அறிந்திருப்பாள்!
நிகழ்காலத்தில் வாழமுடியாமல் கடந்த காலத்தின் சுமையால் உணர்வைத்
தொலைத்த அனைவரும் கல்லாய்ப்போனவர்களே!
நேற்று நம்மில் விட்டுச்சென்ற
குப்பையை, ஏமாற்றப்பட்ட வலியை, நியாயமான
கோபத்தின் காரணமாக நமக்கு நாமே இட்டுக்கொண்ட விலங்கைக் களையும் வலிமை, ஏதோ ஒரு
அற்புததருணத்தில் நமக்குக்கிடைக்கிறது.
பிறர் வலியை உணரும்போதோ, நல்லாசிரியர்
வழிகாட்டுதலின்பேரிலோ கல் உடைந்து,
மறைந்திருந்த மனிதம் வெளிவருகிறது. அகலிகைக்கும்
அதுதான் நிகழ்ந்திருக்கக்கூடும்.
தன் வலியை விட ராமனின் வலி
அதிகமாகத் தெரிந்திருக்கலாம்! அல்லது ராமன் தன் வலியை மறப்பதற்கு உபயோகித்த உத்திகளைக்
கற்றுக்கொடுத்திருக்கலாம்! தாய்க்குச்சமமாகக் கருதிய கைகேயியால் ராமன்
ஏமாற்றப்படுவான் என்று அவள் உணர்ந்திருக்கலாம்! அல்லது ராமன்
சீதையை நம்பாமல் விளைவிக்கவிருக்கும் துயரைவிட கௌதமர் தன்னை நம்பாமல் போன வலி
குறைவாய்த்தெரிந்திருக்கலாம்!
நம்மைச் சுற்றி எத்தனை அகலிகைகள்!
நம்முள் எத்தனை அகலிகைகள்!
கல்லுடைக்க ராமன் வரும் நாள் எந்நாளோ!
No comments:
Post a Comment