Friday, October 10, 2025

கிராமம் நகரம் மாநகரம் மாபெரும் நகரம்: யாதும் ஊரே

கிராமங்களில் பிறந்து நகரங்களில் குடியிருப்போர் பலரும் கிராமங்கள் கடவுளின் மிச்சங்கள் போலவும் நகரங்கள் மனிதம் தீய்ந்துபோன அல்லது தேய்ந்துபோன எச்சங்கள் போலவும் சித்தரிக்கின்றனர். நா முத்துக்குமாரின்  "கிராமம் நகரம் மாநகரம்" புத்தகமும் அப்படி ஒரு மயக்கத்தை முதலில் தந்தது. ஆனால், கிராமத்தில் பிறந்து, நகரங்களில் குடியிருந்த என் அனுபவத்தோடு பொருந்தினாலும், பின் மீண்டும் கிராமத்திற்குப் புலம் பெயர்ந்த அனுபவங்களோடு அவை பொருந்தவில்லை. யோசித்து யோசித்து பார்த்தபோது, கசப்பைத் தேய்ப்பதில், அப்பாவியான(க) வெள்ளையில் கருப்பின் பல சாயல்(ங்)களைக் காட்டுவதில் கிராமங்கள் நகரத்துக்கு ஒப்பானவை அல்லது நகரத்தை மிஞ்சியவை என்ற காட்டமான சிந்தனையும் உள்ளோடிற்று... 

கடையம் என்னும் சிற்றூரில் பிறந்து கோவை என்னும் நகரத்தில் படித்து சென்னை மற்றும் டெல்லி மாநகரங்களில் பல வருடங்களும், பெங்களூரு, டெட்ராய்ட் மாநகரங்களிலும் மற்றும் நியூயார்க் மாபெரும் நகரத்திலும் பல மாதங்களும் வாழ்ந்த காலங்களை மூளை மீளொளிபரப்பியது. கிராமமும் நகரமும் அன்பைக் கொட்டிக் கொடுத்த நினைவுகளும் கொடுக்குகளோடு நின்ற நினைவுகளும் அணிவகுத்து நின்றன. என் வாழ்வின் அழகியல் நிகழ்வுகளும் துன்பியல் நிகழ்வுகளும் பாரபட்சம் இல்லாமல் எல்லா ஊர்களிலும், ஏன், எல்லா நாடுகளிலும் நடந்திருக்கின்றன. முத்துக்குமார் மேற்கோள் காட்டும் சத்திமுற்றப் புலவர் மதுரையில் நின்றதுபோல் நான் நின்ற இடம் நகரமோ மாநகரமோ மாபெரும் நகரமோ இல்லை, என் சிற்றூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இன்னொரு சிற்றூரில்தான். அப்படியானால், ஏன் பெரும்பாலானோர் கிராமங்களை இனிமையானதாகவும், நகரங்களை திகிலுடனும் பார்க்கிறார்கள், சித்தரிக்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடையை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்க இயலாதென்றே தோன்றுகிறது. [ஒற்றைக் கோணம் / single point of view என்பது குறித்து ஒரு கட்டுரை மிக அவசியம் என்று உணர்கிறேன்]

பழைய நினைவுகள் பொதுவாக இதம் தருபவை. அதுவும் பள்ளிப்பருவத்தை நினைத்துப் பார்ப்பது இதம் மட்டுமல்ல மயக்கம் தருவது. பனங்காயின் வண்டியில் பம்பாய்க்கு போனதை நினைப்பது ஒரு போதையாய்ப் போகிறது!!! நம்மில் பெரும்பாலோர்க்கு மாணவப்பருவத்தில் கவலைகளென்று  பெரிதாக ஏதுமில்லை, படிக்கவேண்டியது தவிர வேறு பாரங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லோருமே (சிரமமான பள்ளிப்பருவம் கொண்டவர்கள் உட்பட) அந்த காலகட்டத்தில் இருந்த பாரங்களைவிட பல மடங்கு பின்னாளில் சுமக்கிறோம் / சுமப்பதாக நினைக்கிறோம். அதுமட்டுமல்ல, காதல் பார்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பார்ப்பது நான்கு கண்ணிலடி என்ற சினிமா பாடல் சொல்வதுபோல போல, பாதி கண்ணில் பார்ப்பது காதல் மட்டுமல்ல பால்யமும் தான்... பால்யத்தைத் தொலைத்த பின்  நான்கு கண்ணில் பார்ப்பது நமக்கு பழகிப்போகிறது... அதற்குப் பிறகு, கிராமத்தில் வாழ்ந்தாலும் நகரத்தில் வாழ்ந்தாலும் ஒன்றுதான்!!  குறை காணத் தெரியாத தேவகு(க)ணத்தில்,  கண்ட காட்சியையும், குறைமட்டுமே தெரிகின்ற வாழ்க்கையையும்  ஒப்பிட்டால் எது வெல்லும்!! 

பனங்காய்க்குப் பதிலாக பழைய டயரில் பம்பாய்க்கு போனதும் போதைதானே... ஆனால் ஏன் பனங்காய்க்கு மட்டும் இத்தனை மவுசு...  நகரங்களில் வேறு விளையாட்டுகள் விளையாடித் திரிந்த சிறார்கள் எங்கே!! அவர்களின் தவிப்புகள் என்ன... அவை குறித்து பெரிய பதிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. நகரத்துக்கு வந்த பின், கவிபாடும் கிராமத்துத் தமிழ்ப் பேனாக்களின்  எண்ணிக்கையும் சதவீதமும் நகரத்து பேனாக்களைவிட அதிகம் என்பதாலும், நகரத்துப் பேனாக்கள் ஆங்கிலத்தில் அல்லது வேறு பிற மொழிகளில் மயங்குவதாலும் இருக்கலாம்! அல்லது நகரை விட்டு மாநகரத்துக்கோ, மாபெரும் நகருக்கோ புலம் பெயர்ந்து, தாம் விளையாடிய விளையாட்டுகளை முத்துக்குமார்களின் பழனி பாரதிகளின் வரிகளில் பொருத்திப் பார்த்து திருப்தி ஆகிவிடுகிறார்களோ என்னவோ!!! 

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வாசம், ஒவ்வொரு நினைவு... ஆனால் ஊர் என்பது நிலமோ, அதன் நதியோ, கட்டடங்களோ, கட்டமைப்போ மட்டும்தானா, அங்குள்ள மனிதர்கள், நிகழ்வுகள், அவை தரும் நினைவுகளும்தானே!!  மண் வாசனை வந்தால் எந்த ஊரிலிருந்தாலும் கடையத்தில் இருப்பதாகத்தான் உணர்கிறேன். ஹமாம் சோப்  யாருக்காவது மருத்துவமனையை உணர்த்துமா?!?! எனக்கு வரும்!!  வாசனைக்கு அப்படி ஒரு  சக்தி.  ஒருமுறையேனும் நாம் கடந்த ஊர்கள், இடங்கள், கடந்த நினைவுகளை, கடக்க நினைக்கும் நினைவுகளைக் கிளறும். எந்த ஊரில் எந்த நினைவு எப்போது எழும், என்ன விதமான விளைவுகளைத் தரும் என்பதை யார் உரைக்கக் கூடும்! இனிமையான உணர்வுகளோடு, இனிமையை மட்டுமே உணரும் திறத்தோடு வாழ்ந்த இடத்தின் வாசம் இனிமை தருவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். அவற்றைத் தாண்டி நடுவு நிலையில் நிற்றல் எப்போது வரும்? 

யாதும் ஊரே என்று சொன்னவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? "கல் பொருதுமிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்" என்ற (ஆற்றில் மிதக்கும் தெப்பம்போல வாழ்வு செல்லும் என்று உணர்ந்த) ஆழ்ந்த அமைதி மனதுள் இருந்தால் அனைத்தையும் இயல்பாக ஏற்க முடியுமோ!! தெப்பத்திற்கு ஒரு எதிர்பார்ப்பும் இல்லை, இன்றைய சூ(சு)ழலை நேற்றைய நிலையுடன் நேர் நிறுத்தி எந்த ஒப்பீடும் இல்லை. இந்த நிமிடம் மட்டுமே உண்மை என்று வாழும்போது இத்தகைய மயக்கங்கள் இல்லையோ!!

எல்லா ஊர்களும் விருந்தாளியாக வரும் போது ஒரு முகமும் வாழ வரும்போது ஒரு முகமும் காட்டுகின்றன. நமக்கும், ஊர் சுற்ற செல்லும் போது இருக்கும்  மனநிலையும் புலம்பெயரும் போது இருக்கும்  மனநிலையும் வேறு வேறு தானே!! (புலம் பெயர்தல் என்பது குறித்த தனித்த கட்டுரை எழுதலாம்தான், 7 வருடத்தில் 8 முறை புலம்பெயர்ந்த அனுபவமும், வெவ்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்தாரோடு நெருங்கிப் பழகி உணர்ந்தவற்றையும் கொண்டு... புலம் பெயர்தல் எப்போதும் பரவசம் அளிப்பதாயில்லை. சிலசமயங்களில் பயமளிப்பதாகவும்,  நெஞ்சைப் பிளப்பதாகவும் கூட இருக்கிறது, தெரிந்த ஊருக்கே என்றாலும்...) ஒரு பயணியாகவே எல்லா இடங்களையும் நேரங்களையும் கடந்தால், வாழ்வு இலகுவாக இறகு போல் இருக்கும் என்று முற்றும் உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பயணியாகவே/ விருந்தாளியாகவே இருக்கும் தன்மையை  நிர்ணயிப்பது நம் மனநிலை மட்டுமில்லை... அந்த ஊருக்கு நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும், விதிகளும் கூடத்தான்... உள்ளூர்க்காரர் போன்ற பங்களிப்பும் விருந்தாளி போன்ற மனநிலையும் ஒருங்கே பெற்றவர்கள் பாக்கியவான்கள். 

ரூமி இன்னும் அழகாக "Wherever you stand, be the soul of that place" என்கிறார். நீ எங்கிருந்தாலும் அந்த இடத்தின் ஆன்மாவாக இரு என்கிறார். அன்பின் வழி நிற்கும் உயர்நிலை இல்லாமல் அது கைகூடுமோ!! வேறுவிதமான வாழ்வியலை, சாட்சியாக மட்டும் பார்த்திருந்து, ஒப்பீடுகள் இல்லாமல், வாஞ்சையோடு இருப்பதற்கு எப்பேர்ப்பட்ட நுண்ணறிவும் அன்பும்  வேண்டும். கல்வியின் பயனாய் வள்ளுவர் கூறுவது இதைத்தானே!! என் இனம், என் இடம் என்று குறுகாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று விரிவதற்கு உதவாவிடில் கல்வியால் என்ன பயன்... அறிவால் என்ன பயன்...

சட்டென்று யாதானும் நாடாமால் ஊராமால் என்ற குறள் வேறொரு பொருள் தந்தது!! இத்தனை நாளும் கற்றோரை எல்லா நாடும் எல்லா ஊரும் ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்திருந்தேன்!! அறிவு விசாலமாக ஆக, எல்லா ஊரையும் நாட்டையும் தன் இடம் போல் நினைக்கும் தெளிவையும் அன்பையும் தரும் என்று இப்போது புரிகிறது. இப்படிப்பட்ட அறிவைத் தரும் கல்வியை, சாகும் வரை கல்லாதிருப்பது ஏன் என்ற வள்ளுவரின் விசனம் நியாயமானதுதானே... நல்லவேளை சாவதற்கு முன் புரிந்ததே!! இந்த ஜென்மம் கடைத்தேறிற்று!! 


பிற்குறிப்பு: இவையெல்லாம் "கிராமம் நகரம் மாநகரம்" என்ற நா முத்துக்குமாரின் அருமையான படைப்பை படித்து, முதலில் கிறங்கி, பின்பு திடீரென  விழித்துக் கொண்டதன் விளைவுகள். அவர் மட்டும் பாதியில் விடைபெற்றுப் போகாவிடில், தமிழ் இன்னும் அதிகமான சொல்லாடல்களைக் கண்டிருக்கும்!! வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் வல்லமை மிகுத்திருக்கும்!! கண்ணாடிக்குளம் என்ற ஒரு வார்த்தை இன்னும் பலகாலம் தன்னுள் என்னை ஏந்தி நீஞ்சும்... நீளும்.... அந்த வார்த்தையைப் படித்தபோது "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" மனதுள் வந்து போனது... கம்பன் என்ற சொல்லை முத்துக்குமரன் என்ற சொல்லால் இட்டு நிரப்பி அந்தப் பாடலைப் பாட முடியும்தானே! யாரையும் நகலெடுக்காமல், ஆனால் நான்கு அத்தியாத்திற்குள் நானுறு கவியரசர்களை  நினைவில் நிறுத்துவது ஒன்றும் சாதாரண செயல் அல்ல!!! இன்னும் சில காலம் வாழ்ந்து தமிழை, தமிழ்க் கவிப்பேரரசர்களை வாழ்வித்திருக்கலாம்! என்ன செய்ய... குறுகத் தரித்த குறள்...

No comments:

Post a Comment