போனபொங்கலுக்கு ஞாயிறைமட்டும் போற்றிய கோபத்தில் வர மறந்தாயோ?
கொடுங்கோன்மைகண்டு கொதித்து மறைந்தாயோ?
மழைவரும் செய்தியை பேய்வரும் என்பதுபோல் பயந்து பயப்படுத்திய (குறுஞ்)செய்தியாளர்களால் வரமறந்தாயோ!!
வறட்சியால் உயிர்விடும் உழவனின்/உற்றாரின் வலி சற்றும் உணராமல், பொங்கலன்று அனுப்பப்படும் உலர்ந்த உயிரற்ற வாழ்த்துகண்டு வர மறந்தாயோ?
புதுநெல் உலையிடாமல் பழையது சாப்பிடுகிறோம் என்ற அறிவும் இல்லாமல், மழையில்லையென்றால் வாழ்வில்லையென்று உணராமல், துவைத்ததுணி காயாது, போக்குவரத்து நொண்டும் என்று நொண்டிச்சாக்குகள் காட்டி ஏரியில் மட்டும் மழைபெய்தால் போதும் என்று அதிநவீன "விஞ்ஞானம்" பேசும் அறிவாளிகளைக்கண்டு அலுத்துநின்றாயோ?
உன்துணையான மரங்களை வெட்டிவீழ்த்திய மனிதர்களின் முகம்காண வெறுத்து மறைந்தாயோ?
உன் பகையாளி புகையின்பின்னால் திருந்தாமல் திரியும் மனிதர்களின் முகம்காண வெறுத்து மறைந்தாயோ?
எத்தனை பொழிந்தாலும் வீணாக்கும் அவலம் கண்டு மறைந்தாயோ?
மணலள்ளி ஆற்றின் அழகளிக்கும் அயோக்கியர்களின் முகம்காணமாட்டாமல் மறைந்தாயோ?
வீடுகட்ட மணல் வேண்டும், ஆளுக்கொரு வீடு வேண்டும், மணலுக்கு மாற்றுகண்டுபிடிக்காவிடில் நதிகள் நடைமறக்கும் என்று தெரிந்தும் வாளாவிருந்த எங்கள் பொறியாளர்களின் அறிவுத்திறம் கண்டு வியந்து மறைந்தாயோ?
கோடிகளைக்கொட்டியும் வாழ்வின் துயர் குறைக்க வழிதேடாமல் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆண்டுகளைத் தேய்த்த அறிவியலாளர் ஆற்றல்கண்டு வியந்து மறைந்தாயோ?
அறிவாளர் சொன்னதைக் குப்பையில்போடும் அரசியலாளர் தீரம்கண்டு வெறுத்து மறைந்தாயோ மழையே?
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதும் நீ இறையென்பதுவும் சரிதான் போலும்!! நின்று... கொன்றுவிட்டாயே மாமழையே!!
பிழை மறந்து வருக மழையே! இன்று போற்றினேன்! வருக மழையே!!
நீரால் சூழப்பட்ட உலகுக்கு இறையின் கருணைபோல்சுரப்பதால்
மாமழை போற்றுதும்!!
மாமழை போற்றுதும்!! மாமழை போற்றுதும்!!
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்!!
குறிப்பு:
அவன்அளிபோல் என்பதற்கு "சோழன் கருணைபோல்" என்று பொருள் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை! "அவன்" என்பது
"இறை" என்றுணர்கிறேன்! மழை யாவர்க்கும் பொது; இறைவனும் யாவர்க்கும் பொது; சோழன் பொதுவல்லன்!
No comments:
Post a Comment