Sunday, September 11, 2016

கடலில் கரையும் கடவுள்!

பிள்ளையார் ஒரு அணுக்கமான கடவுளாக உணரப்படுபவர்! எல்லோருக்கும் மிகவும் நெருக்கமான, விஸ்தீரணமான பூஜைகள் எதிர்பார்க்காத எளிமையானவராக கருதப்படுபவர்! சிறு வயதில், ஒரு யானை எப்படி எலியில் பயணம் செய்யமுடியும் என்ற பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர்! அதன்பின் ஏன் இத்தனை பெரிய காது, வயிறு, துதிக்கை என்ற கேள்விகளை ஏற்படுத்தியவர்! , ஆழ்ந்து மூச்சிழுத்து ஆக்சிஜனை அதிகமாக உட்கொண்டால் தெளிவாக சிந்திக்கலாம், அதற்காகத்தான் நீண்ட மூக்காக துதிக்கை, அதிகமாகக்கேட்கத்தான் பெரிய காது, எதையும் ஜீரணிக்கும் திறன் குறிக்க பெரிய வயிறு என்று விளக்கம்கேட்டபின்னர்தான் இந்துக்கடவுள்களையும் கதைகளையும் பலகோணங்களில் சிந்தித்துப்பார்க்கும் குணம் ஏற்பட்டது! அவர் தலைமாறிய கதைகேட்டபோது, வேலை என்று ஏற்றுக்கொண்டபின் தந்தையை எதிர்த்து நிற்கநேர்ந்தாலும், தலையே போனாலும்கூட கடமையைச் சரியாகச்செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது!

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய்ப் போயிற்று என்ற வழக்குமொழி முற்றிலும் தவறானதாகப்பட்டது! வணங்குவதற்காக பிள்ளையார் பிடிப்பது மிக எளிது! மஞ்சளோ, வெல்லமோ, மண்ணோ, பசுஞ்சாணமோ, நான்கு விரலால் பிடித்து ஒரு கூம்பாக்கினால் போதும், அது பிள்ளையார்!! இது எப்படி தப்பாகப்போகும்? இதைக்கூட தப்பாகச் செய்பவர்க்கு குரங்கைச் சமாளிக்கும் தண்டனை தேவைதான் என்றும்கூட நினைத்திருக்கிறேன்!

பிள்ளையாரைக் கடலில் கரைப்பது எங்கள் ஊரில் இல்லை! நான் சென்னைவந்த புதிதில், மண்ணில் செய்த பிள்ளையார் சிலையைக்கொடுத்து சில நாட்கள் பூஜை செய்தபின் கடலில் கரைக்கச் சொல்லி கொடுத்தார்கள். பூஜை செயதேனோ இல்லையோ, பொறுப்பாக கடலில் கரைக்க எடுத்துச் சென்றோம்! கடல்வரை சென்றபின் ஏனோ கரைக்க மனமில்லாமல் வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டேன்! இத்தனைக்கும் அது வெறும் மண் பிள்ளையார்! சூழல் கெடுக்கும் வேதிப்பொருட்களோ, கடல்வாழ் உயிரிகளை வதைக்கும் பிளாஸ்டிக்கோ இல்லை! ஆனாலும் மனமில்லை! இந்த பிள்ளையாரைத்தான் இன்று வண்டிவண்டியாகக் கடலுக்கு எடுத்துச்செல்கிறார்கள்கரைக்க!!

17 வருடங்களில், பிள்ளையார் கரைப்பில் சென்னை இன்னும் தீவிரமாகிவிட்டது! வெறும் அருகம்புல் மாலைமட்டுமே அணிந்து, வெல்லத்தில் பிடித்தால் சர்க்கரைப் பொங்கலிலும், மஞ்சளில் பிடித்தால் குழம்பிலும், மண்ணில் பிடித்தால் செடிகளோடும், பசுஞ்சாணத்தில் பிடித்தால் எரிபொருளாகவும் கலந்து, சுற்றுச்சூழலை எந்தவிதத்திலும் மாசுறுத்தாத பிள்ளையார் இன்றோ பல லிட்டர் பெட்ரோல் குடித்து, பல வண்ணங்களாய் கடலைக் கெடுத்து, தெருவெங்கும் பிளாஸ்டிக் விதைத்து, போக்குவரத்தை முழுதாய் குழப்பி, பலரின் பயணநேரத்தை பலமடங்காக அதிகமாக்கி முழுதும் அந்நியமாகத்தெரிகிறார்!

பிள்ளையார் மட்டுமல்ல மேரி மாதா ஒரு மாதத்துக்கு முன் சென்னையின் போக்குவரத்தை கிட்டத்தட்ட 5 மணிநேரம் திக்குமுக்காடவைத்து சில ஆயிரக்கணக்கான (குறைந்தபட்சம் பல நூற்றுக்கணக்கான) லிட்டர் பெட்ரோல் குடித்தார்! இவையெல்லாம் முறைதானா? பக்தி சரியா தவறா என்ற விவாதத்தில் இறங்க நான் விரும்பவில்லை. அது அவரவர் சொந்த விஷயம்! ஆனால் சொந்த விஷயம் புவியைக் கெடுக்கலாமா என்ற கேள்விதான்! விழாக்களும்  பண்டிகைகளும் மகிழ்ச்சி தரவேண்டும், மனத்தைச் சீராக்கும் சிந்தனை தரவேண்டும், அன்பைப்பகிர்ந்துகொள்ள தளம் அமைத்துத் தரவேண்டுமேயல்லாமல் இப்படி சூழல் குலைப்பதாய் இருத்தல் சரிதானா என்ற வருத்தம்தான்!


அன்னை தந்தைக்குள் உலகைக்கண்டு, எதற்கும் எளியவிடை தேடச் சொன்ன கடவுள், கடலில் கரைகிறார்! விடைதேடவும், வாழ்வை எளிமைப்படுத்தவும்தான் ஆளில்லை!

No comments:

Post a Comment