திருவாசகத்தின் ஒரு பகுதி நீத்தல் விண்ணப்பம்! ஐம்பது பாடல்கள்! வாசிக்கும்பொழுதே ஒரு வருத்தம் பரவுகிறது. வருத்தம் என்றால் சாதாரண சோகமில்லை! ஒரு சொல்லத்தெரியாத உணர்வு, வலி பரவுகின்றது!
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய். விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே
ஐம்பது பாடல் இருந்த போதிலும், இந்த பாடல் தாண்டி வாசிக்க இயலவில்லை! எதை நீக்க விண்ணப்பம்? பெற்றதுகொண்டு பெருக்கும் பிழை நீக்கவா? அன்பைச்சுருக்கும் குறை நீக்கவா? தாங்குநர் இல்லாமையால், உடலினின்று உயிர் நீக்கவா? உற்றுத்தேறினாலும் - உலகின் போக்கு உணர்ந்து தேறினாலும்- விடமுடியா பற்று நீக்கவா? எல்லாமுமா?
இவை நீக்குதல் அத்தனை எளிதா என்ன? "பெற்றதுகொண்டு" என்பதற்கு "உடலால்"
என்று உரை எழுதப்படுகிறது. உடல் மட்டுமா பெற்றது? எல்லா பேறுகளும் பெற்றவை தானே? அதானால்தானே அவற்றுக்கு பேறு என்று பெயர்! பதினாறுவகை பேறுகளும் அதனால் நாம் செய்யும் பிழைகளும் இதில் அடக்கம் என்று தோன்றுகிறது! எத்தனை விதமான கர்வம்! எத்தனை விதமான பிழைகள்! ஒன்று குறைக்க இன்னொன்று துளிர்க்கிறதே!!
அன்பை விரித்தல் என்பதும் எளிதில்லை! தூய அன்பாய் விரிந்தாலும், நாடகம் என உலகம் எள்ளும்! தொழுத கையுள் படை ஒடுங்கியிருக்கிறதோ என்றஞ்சும்! வாளோங்கும்! அன்பை தூய்மையானதாய் மட்டுமே விரித்தலும், பின்னர் வாளோங்கினாலும், எள்ளினாலும் தயங்காமல் தொடர்ந்து விரிதலும் எளிதில்லை!
தாங்குநர் இல்லா நிலை குறித்து மாணிக்கவாசகர் ஏன் நினைக்கவேண்டும்? அமைச்சர், செல்வந்தர், பிரபலர், நெருங்கியோர்க்கும் நெருங்காதோர்க்கும் அன்பர். இத்தனைக்குப் பிறகும், தாங்குநர் இல்லையா? ஒருவேளை முதுமையில் தாங்குவதைப்பற்றி அவர் சொல்லவில்லையோ? என்பிழைகளைத் தாங்குநர் இல்லை என்கிறாரோ? என் செயல்களை பூதக்கண்ணாடிகொண்டு ஆராய்ந்து, குறைகாணாமல், நான் அவர்கள்போலவே இல்லை என்று பழிக்காமல், என்னை நானாக ஏற்றுக் கொள்வோரில்லை, தாங்குநர் இல்லை என்கிறாரோ? அப்படிப்பட்ட சூழல் யாருக்குத்தான் இருக்கிறது? யாருக்குத்தான் நாம் கொடுக்கிறோம்? கொடுப்பதுதானே திரும்ப வரும்?
மாணிக்கவாசகராவது உற்றுத்தேறிவிட்டார்,
அதன்பின் பற்றறுக்கத் துணைதேடுகின்றார்! என்போல் உற்றுத்தேறாதோர் கதி என்ன? விருந்துண்டபின் வரும் நிறைவு போல நிறைவான வாழ்வின்பின் பற்று நீங்கும் என நினைத்ததுண்டு! விருந்துக்குப்பின் மட்டுமல்ல, ஒவ்வாமையாலும்கூட பற்று நீங்குமோ என்றும் நினைத்ததுண்டு! இரண்டும் பிழையான கருத்துக்கள்; உயிர்வாழமட்டுமே உணவு என்று மனத்தால் தள்ளிநின்றால் மட்டுமே அறுக்க ஏலுமோ என்றும் நினைத்ததுண்டு! நினைத்தல் எத்தனை எளிது!! நினைப்பவற்றைத் தெளிவாய்ச் சொல்வது கடினம்! அதைவிடக் கடினம் சொல்லியவண்ணம், எண்ணியவண்ணம் செயல்!
ஆகவே, நீத்தலை விண்ணப்பிக்கமட்டும்தான் முடியுமோ? முயன்று அடைதல் கூடாதோ? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தருமன்றோ? திருக்குறள் பொதுமறை இல்லையோ?
No comments:
Post a Comment