மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் என்ற வரிகளுடன் நா முத்துக்குமார் எழுதிய பாடலொன்று மிகவும் பிரபலமானது. என்னைப் பொறுத்தவரை மகள்களைப் பெற்ற அப்பாக்கள் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்...
மனைவியும், பிற பெண்களும் கூட யாருக்கோ மகள்தான் என்ற நினைப்பே இல்லாமல், அவர்களை, சின்னதும் பெரியதுமாய் அவமதித்த / அவமதிக்கின்ற / வருத்துகின்ற புரிதல் கூட இல்லாமல், தன் மகள் மட்டும் ஒரு ராஜகுமாரி என்று நம்பும், தன் மகளை அவள் கணவனோ, பிற ஆண்களோ நிந்திக்கும் போதும், மகள் சமூகத்தின் அவலங்களில் அல்லாடும்போதும் அங்கலாய்க்கும் தந்தைமார்கள், ஆச்சர்யமானவர்கள்தானே!!! ஒருவேளை பார்வை குறைபாடோ என்று நாம் இரங்கும் அளவுக்கு ஆச்சரியம்தான்...
பெண்கள் நைட்டி போடலாமா கூடாதா என்ற விவாதம் நடந்த வீடுகளில்தான், மகள்கள் அரைக்கால் சட்டை (லெக்கின்ஸாகவும் இருக்கலாம்) அணிகிறார்கள் என்ற, யாரோ எழுதிய வரி அவ்வப்போது நினைவிலாடத் தவறுவதில்லை... இதில் எந்த உடை சரி தவறு என்பதல்ல கேள்வி; அவரவர் உடை அவரவர் வசதிப்படி!!! ஆனால், தனக்கொரு வழி பிறருக்கு வழி என்று நினைப்பது பொதுவாக மனித இயல்பா அல்லது ஆண்களின் பிறப்புரிமையா என்பதுதான் கேள்வி!!! ஒருவேளை தன் அனுமதியின் பேரில் நடப்பதாக நிறைவடைகிறார்களோ என்னவோ!!!
அந்த தந்தைகளுக்குப் புரிகிறதோ இல்லையோ, காலம் மட்டும் தன் கணக்கைத் தவறவிடுவதேயில்லை!! எப்படியாவது புரியவைக்க முயன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும் என்னவோ, அவர்களுக்கு, தாம் தம் மனையாளுக்கும், பிற பெண்களுக்கும் இழைத்த குற்றங்கள் புரிந்தபாடாயில்லை.... புரிந்தாலும், சரியானதைச் செயலாக்கத் தெரியவில்லை... புரிதலுக்கும் செயலாக்கத்துக்கும் இருக்கும் இடைவெளி எல்லை நீத்த பெருவெளி....
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். மகள்களைப் பெற்ற தந்தைமார் பாக்கியவான்கள்!! பாடமாவது கிடைக்கிறது - புரிவதும் புரியாததும் அவரவர் ஞானத்தையும் பூர்வ புண்ணியத்தையும் பொறுத்தது ;-) ;-) மற்றவர்களைப் பெற்ற தகப்பன்களுக்குப் புரிய வைப்பார் யாரோ!! எதுவோ!! புரியவேயில்லை என்றால் செயல் எப்போது / எப்படி மாறும்!!
மாறாது என்று விட்டுவிடக் கூடிய விஷயம்தானா இது! விட்டுவிடலாம்தான்!! நமக்கென்ன பாதி கிணறு தாண்டியாயிற்று; மீதி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் நிழல் கூடப் படாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்தான்.... ஆனால், அப்படியே விட்டுவிடுவது ஒரு எஸ்கேப்பிசம். உலகத்தின் மொத்த வறுமையையும் இட்டு நிரப்ப முடியாமல் போகலாம் ஆனால், பசித்த ஒருவருக்கு உணவிட முடியும் அல்லவா!! அதுபோலத்தான், எல்லா அப்பாக்களையும் (அப்பாவாக இன்னும் மாறாதவர்களையும்) மாற்ற முடியாமல் போகலாம். ஆனால், ஓரிருவர் மாறினாலும் உலகம் கொஞ்சம் சுத்தமாகும், கொஞ்சம் ஒளியேறும், கொஞ்சம் சிறக்கும் என்ற பேராசை எனக்கு.
கார்ப்பரேட் நிறுவனங்கள், சக மனிதர்களை சமமாக நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளன. சரியானபடி நடந்து கொள்ளாவிடில் வேலை போய்விடும் என்ற பயமும் ஒரு காரணம் என்றாலும், புரிதலும் முக்கிய காரணம். எனவே, வளையக்கூடிய ஐந்து வயது சிறுவர் சிறுமிகளுக்கும், தேடலோடு இருக்கும் பதின்ம வயதினருக்கும், மாறும் திறன் இன்னும் மரித்துப் போகாத மனிதர்களுக்கும், சக மனிதர்களை மரியாதையுடன், அன்புடன், மனித நேயத்துடன், நடத்த பாலினமோ, மொழியோ, நாடோ, தோலின் வண்ணமோ, இன்ன பிற வேறுபாடுகளோ தடையல்ல என்று சொல்லித் தரவேண்டியது, இந்த காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவை. இந்தக் கல்வி, ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும், (மகனையோ மகளையோ பெற்ற) பெற்றோர்களுக்கும் தேவை; அப்பாக்கள் மாற அனைவரும் படிக்கவேண்டியிருக்கிறது.
நம்முடைய அடுத்த அறப்பணி இந்த நோக்கத்தை நோக்கி நகரும்!!! ஆற்றலும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தெரிவியுங்கள்.
பிற்குறிப்புகள் :
- நண்பர்கள் என்பது பொதுவான சொல். பாலினம் சார்ந்ததல்ல.
- தன் எண்ணத்தை, செயலை, மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே, புதிதாகக் கற்றுக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே மு(த்)தியவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!!! அப்படி, வளைய முடியா வயதில் இருப்பவர்களை, தண்டிப்பது அல்லது தவிர்ப்பது மூலம் மாற்ற வேண்டியதுதான்.--- உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை!!