Friday, May 8, 2020

மரணத்தின் விளிம்பிலிருந்து....

மரணம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இன்னும் இருக்கிறது!!   வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்து. மனிதர்களை நேரில் பார்த்து ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது!!  இந்நேரத்தில் வாழ்வை உற்றுநோக்கும் வயதும்அனுபவமும், மனதும், சிந்தனையாளர்கள் தொடர்பும் வாய்க்கப்பெற்றது முன்வினைப்பயன்! வேறெந்த தலைமுறைக்கும் வாய்க்காத கொடுப்பினை! வாழ்வியல் தத்துவங்கள் புடம்போடப்படுகின்றன! சில உடைந்துவிட்டதாக தோன்றுகின்றது; வேறு சில தினமும் வெவ்வேறு கோணங்களைக் காட்டுகின்றன! இயற்கை நடத்தும் மிகப்பெரிய பாடமாக சில நேரம், பாரம் குறைக்க இயற்கைசெய்யும் முயற்சியாகச் சிலநேரம் என்று இந்தகாலகட்டம் மிகப்பெரிய ஆச்சரியத்தையளிக்கிறது. விளைவு, மீண்டும் ஓர் எண்ணக்கோர்வை!!


  • அன்பைத்தவிர பெரிய தவமில்லை. அன்பென்பது ஒரு வெளிப்பாடாய், உணர்வாய்த்தோன்றிய காலம்போக, அன்பு ஒரு தன்னிலையிருப்பாய் தோன்றுகிறதுஓரிருவர்மேல் மட்டும் காட்டப்படும் அக்கறை தாண்டி, அனைத்து உயிர்கள்மீதும் பொழியும் அனபைத்தவிர தவமொன்றுமில்லைநதியாய், நதியில் பயணிக்கும் இலையாய் இருப்பதன்  பொருள் இதுவாகத்தான் இருக்கக்கூடும்... நதிக்கு இன்னார்மேலென்று தனிப்பட்ட பிடிப்பில்லை... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சலசலத்து ஓடும் அதன் ஓட்டம் நிற்பதில்லை... அழகு குறைவதில்லை... யாரும் நீர்சேந்தவில்லையென்றோதேவைக்கு  அதிகமாகக் கொண்டு செல்கிறார்கள் என்றோ எந்த சலனமும் இல்லை... நீர்சேந்துவோரின் தகுதியோ மனநிலையோ  ஒருபொருட்டுமில்லை...
  • நன்றி என்பது மிகவும் முக்கியமான உணர்வு! கடினமான ஒரு நாளைக்கூட  அழகியதாய் மாற்றும் வல்லமை கொண்டது. வாழ்வு மிச்சமிருப்பதே நன்றிபாராட்டப் போதுமானதாக இருக்கிறது!! அதற்குமேல் கிடைக்கும் அத்தனையும் பெருங்கொடையாகத் தெரிகின்றது!!!  மரணம் முந்திக்கொள்வதற்குள், நம் வாழ்வைச் செம்மையாக்கிய  அத்தனைபேருக்கும் நன்றி சொல்லித்தீர்த்துவிட முடியுமா!?!?!
  • தடிகொண்டு அடித்து பழுத்தது ருசிக்காது, தானாகப்  பழுத்தது ருசிக்கும்! உண்மையாகவா!?!?!  வாழ்வின் ஓட்டம் என்ற பெருந்தடியால் அடிபடாமல் பழுக்கவும் முடியுமோ!!  
  • இனையர் இவரெமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்பது வள்ளுவம். இவர் எமக்கு இத்தனை அன்புடையவர், நாமும் இவர்க்கு அப்படியே என்று புகழ்ந்துரைத்தால் நட்பு சிறப்பிழக்கும் என்பது பொருள்! நட்பின் தரம் சொல்லாமல் அன்பின் ஆழம்  காட்டாமல் நன்றியுரைப்பது எப்படி?
  • நட்பு, கொடை, தயை இம்மூன்றும் குடிப்பிறப்பு என்பது ஒளவை வாக்கு. என்னைச் சுற்றியிருப்போர் அத்தனை பேரும் தன்னலம் பாராட்டா நட்புடனும், வாரி வழங்கும் கொடையாளராகவும், பேரன்பு கொண்ட கருணையாளராகவும் இருப்பது எப்படி? சூழல் காரணமா? குடிப்பிறப்பா? இவர்களெல்லாம் வெவ்வேறு மாநிலத்தில் பிறந்து, வெவ்வேறு மொழிபேசி, வெவ்வேறு குடிப்பிறந்தோர்!!
  • மரணம் எப்போதும் இதே தூரத்தில்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் எட்டிப்பிடித்துவிடக்கூடியதாக! ஏதோ இப்போதுதான் அருகில் வந்ததுபோல் ஏன் இப்படி ஒரு பதற்றம்!!! என்ன, ஒரு வித்தியாசம் சொல்லலாம்! 2020க்கு முற்பட்டகாலத்தில் மரித்தோரின் உடலு றுப்புகளை தானம் கொடுத்திருக்கலாம் இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது!
  • வாழ்க்கை எப்போதுவேண்டுமானாலும் முடிந்துவிடக்கூடுமென்ற நினைவு, அறிவு எப்போதும் வேண்டும் என்ற நினைத்த தேசத்திலும்கூட வாழ்க்கை வினோதமாகத்தான் இருக்கிறது!!! மனிதர்களின் இயக்கத்தை மரணபயம் புரட்டிப்போட்ட கடந்த சிலவாரங்கள் வினோதமானவை!! மனிதர்களின் ஆழ்மனம் தன்னை எத்தனை விதமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளது... அதிநுட்பமான அழகியலும், அடியாழத்தைத்தொட்ட அவலங்களுமாக!!!  
  • தெரிந்தோர் தெரியாதோர் என்ற பாகுபாடின்றி உணவுக்கு வழிசெய்ய களம்புகுந்தோரும், இருக்கிறது இல்லை என்ற பாகுபாடின்றி பொருட்களை வாங்கிக் குவித்தோருமாக உலகம் எத்தனை விதமான வேறுபாடுகளைக்கொண்டது!!
  • எதுவும் உறுதியில்லை என்று புரிந்தபின்னும் இயல்பாய், உற்சாகமாய், அழகாய் வாழ்வோரும், இத்தனைக்குப்பிறகும், சிறுவிஷயங்களுக்கும் அலட்டி, தன்னையும் பிறரையும் வருத்துவோரும் வாழும் முரண்....
  • வலிமிகுந்த / குழப்பமான நிலையிலும் ஆதாரமற்ற  கருத்துகளை ஆராயாமல் அப்படியே பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள்  படித்தவர்களாக, பொறுப்பு மிக்க பதவியிலிருப்பவர்களாக இருப்பது ஆச்சரியத்தின் உச்சம்! நிறைகுடம் தளும்பாது!! குறைகுடம் கூத்தாடும்!! படிப்பும் பதவியும் பொறுப்பும் நிறைகுடமாக்காது போலும்!!!!
  • பொங்கிவழியும் கோப்பைகள் எதையும் உட்கொள்ளும் தன்மையற்றவை, உங்களைக் காலி கோப்பையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றொரு அறிவுரை உண்டு! பொங்கிவழிந்த கோப்பைகளும் (குறைகுடங்களும்) அமைதியாய் தம்மை நிரப்பிக்கொண்ட காலிகோப்பைகளும் (நிறைகுடங்களும்) நிரம்பிய அழகிய முரண் இவ்வுலகம்!
  • 2019 ஆகஸ்டில் இந்திய துணைக்கண்டத்திலுள்ள பெருவாரி நதிகள் பொங்கி அருகிலுள்ள சிவாலயங்களுக்குள் புகுந்ததை ஊடகங்கள் தெரிவித்தன! 2020ல் மனித சஞ்சாரம் முழுவதும் / பெரும்பாலும் அடங்கிவிட்டது! அசுரராய் மாறிவிட்ட நரர்களிடமிருந்து தம்மைக் காக்க நதிகள் நடத்திய வழிபாடு வெற்றிபெற்றதோ!!  ஒருவேளை, இந்த வைரஸ் நோயில்லையோ!!  உலகைக் காக்கவந்த மருந்தோ!!
  • பொருளாதாரத்துக்காக குடிமக்கள் நலனை அடகுவைக்காத எங்கள் தேசம் என்று நம்முள்  சிலர் வலைத்தளங்களில் மார்தட்டிய  சிலநாட்களில் கள்ளுக்கடையைத் திறந்த அரசாங்கமும், காய்கறிக்கடையை விட கள்ளுக்கடையில் கூடிய கூட்டத்தால் வரவிருக்கும் காய்ச்சலும், கர்வமில்லாமல் அலட்டாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்திய அவலம்யார்கண்டது, இதுகூட இயற்கையின் elimination process-ன் prioritization technique-ஆக இருக்கலாம்!
  • இன்னும் 30 மணியோ, 30 நாளோ, 30 வருடமோ, நாம்மட்டுமே இட்டு நிரப்பக்கூடிய விஷயங்கள் எவை என்று தெரிந்தால் எவ்வளவு எளிதாயிருக்கும்!! உண்மையில் அப்படி ஒன்றும் இல்லையோ... பேரறிஞர்களுக்கு மட்டும் அப்படி ஒரு குறிக்கோள் இருக்கிறதன்றோ! அல்லது  அப்படி ஒரு குறிக்கோள் இருப்பவர்கள் மட்டும்  பேரறிஞர்கள் ஆகிறார்களோ!! பேரறிஞராகவெல்லாம் ஒன்றும் ஆகவேண்டாம்! வேலையைப் பாதியில் விட்டுச்செல்வதாக குற்ற உணர்வின்றி விடைபெற்றால் போதும்!