Saturday, July 6, 2019

வீடென்று எதைச் சொல்வீர்?


அறியாத வயதில், பள்ளிப் பருவத்தில், "வீடென்று எதைச் சொல்வீர்?" எனத்தொடங்கும் கவிதை வாசித்தது ஒரு இரவு நேரம்து இன்றும்  நினைவில் உண்டு. அப்போது, அந்த கவிதை சொல்லும் வறுமை புரியவில்லை; ஆனால் அந்த கேள்வி ஒரு வித்தியாசமான கேள்வியாய்ப் பட்டது;  வீடென்றால் என்னவென்று எப்படி தெரியாமல்போகும், அந்தகேள்விக்கு வேறு வேறு பதில்களும் எப்படி இருக்கக்கூடும் என்ற வினாக்களோடு உறங்கிபோனேன்மற்ற வரிகள் நினைவில் நிற்கவில்லை; எழுதிய கவிஞர் பேர் நினைவில்லை; இன்னும் சொல்லப்போனால் கவிஞர் பேர்பார்த்துப்படிக்கும் தெளிவும் அறிவும் இல்லாத வயது; ஆனால் ஏனோ அந்தக் கேள்வி மட்டும் ஆழமாய்ப் பதிந்துபோயிற்று; வாழ்வின் பல்வேறு படிநிலைகளில் அவ்வப்போது மனதில் வந்துபோயிற்று!!

அந்தக்கேள்வி இன்று வேறு தளத்தில் நிற்பதாகப்படுகிறது.  நவீன குறுங்கவிதையொன்று "வீடென்று எதைச் சொல்வீர்உண்டுறங்கி உடல் கழுவி உள்ளம் களைத்து ஒடுங்குமிடம்என்கிறதுகடந்த சில மாதங்களாய் பயணமே வாழ்க்கையாயிற்று!! ஒரு சூட்கேசுக்குள் வாழ்க்கை நடத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளும் வாய்ப்பு!! ஓரிரு வாரங்களுக்குமேல் எந்த இடத்திலும் வசிக்கவில்லை!! வீடு ஹோட்டல் போலவும் ஹோட்டல் வீடு போலவும் தெரிகிறது!!  எது வீடு? எல்லாமும் வீடுதான்!! இல்லையென்றால், எதுவும் வீடில்லைதான்!

பற்றறுப்பதற்காக, துறவிகள் ஒரு ஊரில் ஒரு நாளுக்கு மேல் தங்குவதில்லை/  தங்குவதற்கு சாஸ்திரத்தில் அனுமதியில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் துறவியில்லை; நான் தங்குமிடங்கள் மிகவும் அதிநவீன அதியற்புதமான வசதிகள் கொண்டவை; ஆனாலும் வீடென்று எதைச் சொல்வீர் என்ற கேள்வி பற்றின்றி மனத்திலாடுகின்றது! ஆனந்தமாக!!

பிற்குறிப்பு: இந்த கட்டுரைக்காக மூலக்கவிதையைத் தேடிப் படித்தேன். கவிதைக்காட்டும் வறுமை முகத்தில் அறைந்தது. ஏன் மாலன் கவிஞராய்த் தொடராமல்  பத்திரிக்கை ஆசிரியராய், தொலைக்காட்சியாளராய் மாறிவிட்டார், வாய்ப்பு காரணாமாகவா பிடிப்பு காரணமாகவா என்ற கேள்வியும் இடித்தது!

மூலக்கவிதை:

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ