இந்த வார விகடனில் மறைந்த இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்கள் 90களில்
எழுதிய ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது.
அவர் 12 வயதில் 20 வயது
ஆசிரியையை காதலித்ததாக எழுதியிருந்தார்!!
இது எனக்கு மிகுந்த வியப்பை
அளிக்கிறது. அவர் மட்டுமல்ல எத்தனையோ இயக்குநர்கள், எழுத்தாளர்கள், எனது
நண்பர்கள் சிலர் இத்தகைய உணர்வு குறித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். எனவே
எனது வியப்புக்கு காரணம் முதல் முறையாகக்கேட்பது அல்ல - பல
முறை, பல ஆண்கள் இதைப் பேசியிருப்பதும், எந்த பெண் பிரபலமும் தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியரிடம் இத்தகைய
காதல் ஏற்பட்டாதாகச் சொல்லாததும்தான்!
பெண்கள் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்களா அல்லது பெரும்பாலான ஆண்கள்
பெண்களைப்பார்க்கும் கண்ணோட்டமே இப்படிதானா!
எது காரணம் என்று யோசிக்க யோசிக்க
இரண்டாவது காரணம்தான் சரி என்றுபடுகிறது.
எனக்கு 4ம் வகுப்பெடுத்த, அன்பே வடிவான, மாணவர்களிடம்
கோபத்தைக் காட்டவே தெரியாத ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களை இன்றும்
மதிக்கிறேன். என்னுள் இருந்த பேச்சாளியைக் கண்டெடுத்ததில்
அவருக்குத்தான் முதலிடம். முதன்முதலாய் என்னை மேடையேற்றிப் பேசவைத்து, ஒரு
டம்ளர் பரிசளித்தார். நான் வேலைக்கு வந்து பலகாலம் வரை அந்த டம்ளரை
பாதுகாத்து வைத்திருந்தேன். இன்றும் எங்காவது ஒரு பரணில் அந்த டம்ளர்
பத்திரமாக இருக்கக்கூடும்! ஆனாலும் என் ஆசிரியரின் மீது காதல் வயப்பட்டாதாக
நினைவில்லை எனக்கு! 5ம் வகுப்பாசிரியர் திரு முத்து வடிவேல்
அவர்களிடமோ, திரு.
திருமலை அவர்களிடமோ மரியாதை தவிர
வேறெந்த உணர்வும் ஏற்படவேயில்லை!
கல்லூரிக்காலத்திலும்கூட அப்படித்தான்! நாராயணன்
சார் என்றால் அவர் கற்றுக்கொடுத்த
"Numerical Methods" பாடம்தானே
தவிர வேறொன்றுமில்லை! சரி, அவராவது வயதானவர்! ஆனால் என் வயதொத்த
அருண், கதிர்வளவ குமார் போன்ற ஆசிரியர்களும் இருந்தனர் - இவர்கள்
மணமானவர்களா இல்லையா என்றுகூட யோசித்த ஞாபகமில்லை! ஆசிரியர் மாணவர் என்ற
தொடர்பு தாண்டி நட்பு கூட இருக்கவில்லை!
இத்தனை வருட IT
experience-ல், எனது
ஆசிரியர்களாக இருந்த, இருக்கின்ற பல ஆண்கள் நண்பர்களாகத்தான்
இருக்கிறார்கள்! வேறெந்த மயக்கமும் ஏற்பட்ட நினைவில்லை! சரி
போகட்டும், அவர்கள் அனைவரையும் ஆசிரியர் என்ற பிரிவில்
வைக்காமல், உடன் பணிபுரிபவர்கள் என்று வைத்து, கணக்கில்
எடுக்காமல் விட்டுவிட்டலாம்! இப்போது எனக்கு ஆசிரியராய் இருப்பவர்
பேராசிரியர் சுரேஷ். ஆய்வு குறித்தும், அல்லாமலும் பல மணி நேர
உரையாடல்கள் இருந்த போதிலும், கல்லூரிக்காலம் போலல்லாமல் பெயர் சொல்லி
அழைத்தாலுங்கூட, கூர்ந்த மதிநுட்பம், அகண்ட
அறிவு குறித்த மரியாதையுடன், நல்ல நண்பர் என்ற எண்ணமிருக்கிறதேயன்றி
பாலுமகேந்திரா கூறுவது போல இன்னபிற உணர்வுகள் எழவில்லை!
நான் ஒரு வித்தியாசமான பிறவி என்று கொள்வதற்கில்லை. எனது
தோழிகள் தங்கள் ஆசிரியர்கள் குறித்துப் பேசும்போதும் இதுபோன்ற கருத்தே
வெளிபடுகிறது! இந்திய வரைபடம் குறித்த ஞானமளித்த தனது வரலாற்று
ஆசிரியரை இன்றும் விழிவிரிய நினைவுகூரும் என் அன்னை முதல் Aerobics ஆசிரியர்
நன்றாகச்சொல்லித் தருவார் என்று சொல்லும்
10 வயது ஜெனி வரை யாரும்
ஆசிரியர்கள் மீது காதல் கொண்டாதாகத் தெரியவில்லை!
இது ஒரு வேளை ஜீன்களின் செயல்பாடோ என்னவோ! அல்லது, மரியாதை
என்றும் அன்பு என்றும் எனது வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கூறுவதைத்தான்
பாலுமகேந்திரா காதல் என்று தவறாகப்புரிந்து-கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை!
ஆனாலும், சேரன்களுக்குத்தானே Autograph கதையிருக்கிறது!