Tuesday, January 7, 2014

வலி

முந்தைய கட்டுரையில் வலி என்னும் சொல் குறித்த எனது கருத்தைப் பதிவுசெய்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடமிருந்து வெகு வேகமான மறுப்பு வந்தது. வலி தாங்கி வலிமை பெறுவது மல்யுத்த வீரர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த வலி என்ன வலிமை தரும்? விபத்திலோ, நோயாலோ உடல் திறன் இழந்தவரின் வலி என்ன வலிமை தரும் என்ற வாதங்களுடன் மடலொன்று விரைந்து வந்தது அவரிடமிருந்து!
வலி வந்தாலே வலிமை வரும் என்ற பொருள் கொண்டதால் வந்த கருத்து வேறுபாடென்றே இதைக் கருதுகிறேன். வலி தாங்கி, வலியை முறைப்படுத்தும்போதுதான் வலிமை வருகின்றது.

வலியின் வீரியம் எப்போது அதிகம்? நாம் வலியிலிருக்கும்பொழுதா அல்லது பிறர் வலியைப் பார்க்க நேரும்பொழுதா?

சில வருடங்களுக்குமுன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வலியில் தவிக்க நேரிட்டது. மருத்துவர்களும், செவிலியரும் தம்மால் இயன்ற மருத்துவம் செய்தும் வலி குறைந்தபாடாய் இல்லை; மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலை வேறு! என் பெற்றோருக்கு இருந்த ஒரே வழி, எனது வலியைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான். தங்கள் கலக்கத்தை என்னிடமும் காட்ட இயலாமல், என் வலி குறைக்க எதுவும் செய்ய இயலாமல், வெறும் சாட்சியாக நின்று பார்க்க வேண்டிய சூழல். கலங்கும் கண்களை மறைத்துக்கொண்டு, என் தலை வருடி, பிரார்த்தனையுடன் இருப்பது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.  கையாலாகாமல் பிறர் வலி பார்த்திருத்தல் - உலகின் மிகப்பெரிய வலி இதுதான் என்று நினைக்கிறேன். அதுவும் வலியிலிருப்பவர் அன்புக்குரியவராயின் நம் வலி பன்மடங்காகிறது. 

மேற்குறித்த சம்பவத்திற்குப்பிறகு என் வலி தாங்கும் திறன் அதிகரித்ததாகவே தோன்றுகிறது. ஆனால் என் பெற்றோரோ இன்னும் மென்மையானவராக மாறியது போன்ற ஒரு தோற்றம்! யாருக்கு உடல் நலம் குறைந்தாலும் மௌனமான பிரார்த்தனையுடனிகிறார்கள். வலிமை என்பதற்கு யுத்தம் செய்யத் தயாராயிருப்பது என்றுதான் பொருளா என்ன? சகல உயிர்களிடமும் அன்புடனிருப்பதும் வலிமையின் வெளிப்பாடல்லவா!

வலியைச் சரியாகக்கையாளும்போது வலிமை கூடுகிறது என்பதற்கு, கணவனை இழந்து, நண்பர்களால் வேதனைக்குள்ளான என் தோழியும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் PhD செய்துமுடித்த பேராசிரியையும் சிறந்த உதாரணங்களல்லவா!! வலியை மயக்க மருந்தாகக் கருதுவோர் வலிமை அடைவதில்லை! வலியைக் கிரியா ஊக்கியாகக் கொள்வோரே வலிமை பெறுகிறார்கள்! இது மல்யுத்த வீரருக்கும் பொருந்தும் நண்பரே!